புதிய செய்திகள்

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா ஆண்டுவிழா 3-ம் ஜியாரத் நிகழ்ச்சி சிறப்பு காட்சிகள்
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் அமைந்துள்ள மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா ஆண்டுவிழா ஹிஜ்ரி ஆண்டு 1433 ரஜப் மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. முதல் நாளில் இருந்து பிறை 13 வரை "மௌலூது ஷெரீப்" ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்று,  


மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு
மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா(ரலி) தர்ஹா ஆண்டுவிழா
ஞானபுகழ்ச்சி நிகழ்ச்சி நடந்தது
03-06-2012
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் அமைந்துள்ள மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா ஆண்டுவிழா ஹிஜ்ரி ஆண்டு 1433 ரஜப் மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. முதல் நாளில் இருந்து பிறை 13 வரை "மௌலூது ஷெரீப்" ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்று, தொடர்ந்து நேர்ச்சை வழங்கப்பட்டது. 31-05-2012 அன்று இரவு 9 மணி அளவில் "ஞானபுகழ்ச்சி" பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தக்கலையில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களும், மணவாளக்குறிச்சி முஹல்ல வாசிகளும் இணைந்து ஞானபுகழ்ச்சியை பாடினர்.


மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா தர்ஹா


ஞானபுகழ்ச்சி பாடப்படுதல்
video
ஞானபுகழ்ச்சி வீடியோ 

பெரும் திரளான இஸ்லாமிய பெருமக்கள் இந்நிகழ்ச்சியை பார்த்தனர். ஞானபுகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி முடிவில் மறுநாள் அதிகாலை சிறப்பு நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஞாயிற்றுகிழமை (03-06-2012) அன்று  மூன்றாம் ஜியாரத் நிகழ்ச்சியில் அனைத்து சமூக மக்களும் நன்கொடை வழங்குவர். மாலையில் எல்லா தரப்பு மக்களுக்கும் நேர்ச்சை வழங்கப்படும். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல நிர்வாகள் செய்துள்ளனர்.


பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து
மணவாளக்குறிச்சி பகுதியில் கடைகள் அடைப்பு
03-06-2012
மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை கணிசமான அளவில் உயர்த்தியது. லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினர்.





முழு அடைப்பை ஒட்டி மணவாளக்குறிச்சி பகுதியில்
அடைக்கப்பட்ட கடைகள்
இந்நிலையில் 31-05-2012 அன்று எதிர்கட்சிகளான பா.ஜனத மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை தொடர்ந்து அன்று நடைபெற்ற முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து மணவாளக்குறிச்சி பகுதியில் அனைத்து கடைகளும் காலை முதல் அடைக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் காலை முதல் வழக்கமாக ஓடியது. குமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்களால் மாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


மணவாளக்குறிச்சி
பூவாடி - பெரியகுளம் ஏலா சாலையின் அவலநிலை
03-06-2012
மணவாளக்குறிச்சி பேரூராட்சி குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் மிக முக்கியமான ஒரு ஊராகும். இங்கு பல்வேறுபட்ட சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், திருமண மண்டபங்கள் மற்றும் மத்திய அரசின் இந்திய அறிய மணல் ஆலை, மேலும் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. அதே வேளையில் ஊருக்குள் செல்லும் சாலைகளின் நிலை படுமோசமாக உள்ளது.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்
பல பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால், சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 28-ம் தேதி ஜெகன் என்ற வாலிபர் குறுகிய பாதையில் லாரி சென்றதால் விபத்து ஏற்பட்டு பலியானார். மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பூவாடி பகுதியில் இருந்து மணவாளக்குறிச்சி ஏலா பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலை வழியே சக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து நடக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஆகவே, பேரூராட்சி நிர்வாகம் இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.



மணவாளக்குறிச்சி அருகே
தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்குதல்
பேர் மீது வழக்குப்பதிவு
03-06-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள தெற்கூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(25), சதீஷ்(28), அருள்லிங்கம்(25) ஆகிய 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று 3 பேரும் சேர்ந்து சக்திவேலை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சக்திவேல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில்
கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
03-06-2012
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள படர்நிலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். மணல் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் பிரதீபா (வயது 19). அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிரதீபா 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கும் பரப்பற்று என்ற ஊரை சார்ந்த யசோதா என்பவரின் மகன் ஜெகனுக்கும் (வயது 23) காதல் உருவானது. ஜெகன் கூலி தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

காதல் ஜோடி
இந்தநிலையில் பிரதீபா வீட்டில் கம்ப்யூட்டர் படிக்க போகிறேன் என்று கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவர் காதலன் ஜெகனை மண்டைக்காடு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் காதல் ஜோடி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். மணவாளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் காதலர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.


ஆரல்வாய்மொழி அருகே
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
உடலை ½ கி.மீட்டர் இழுத்துச்சென்ற 
வேகத்தடையில் உதறிய பரிதாபம்
03-06-2012
கேரள மாநிலம் நெடுமங்காட்டை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் திருவிழா கடைகளில் இனிப்பு மிட்டாய் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.  இந்த நிலையில்  01-06-2012 அன்று இரவு குமார் வெள்ளமடத்துக்கு வந்தார். அங்கு அவர் மது குடித்துவிட்டு தனது மடியிலும் ஒரு மது பாட்டிலை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரோட்டில் நடந்து சென்றார்.

வெள்ளமடம் குமாரன்புதூர் விலக்கு அருகே செல்லும் போது ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதியது. பின்னர் அந்த வாகனம் குலசேகரம்புதூர் பாதையில் திரும்பியது. அந்த வாகனம் குமாரை அரை கி.மீட்டர் தூரம் இழுத்து சென்றது. அப்போது ஒரு வேகத்தடை குறுக்கிட்டது. அதில் ஏறி, இறங்கிய வாகனம், வேகத்தடையில் குமாரை உதறிவிட்டு சென்றது. இதில் குமார் படுகாயம் அடைந்தார். மேலும் மடியில் வைத்திருந்த மதுபாட்டிலும் இழுத்துவந்த வேகத்தில் உடைந்து உடலில் குத்தி ரத்த காயத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த இடத்திலேயே சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை பார்த்த அப்பகுதியினர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பபம் பற்றி ஆரல்வாய்மொழி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, தொழிலாளி மீது மோதிய வாகனத்தை தேடி வருகிறார்.


தக்கலை ஒலியுல்லா விழா
ஜூன்-5 ம் தேதி உள்ளூர் விடுமுறை
கலெக்டர் அறிவிப்பு
03-06-2012
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தக்கலை ஷேக் பீர் முகம்மது ஒலியுல்லா நினைவுநாள் பெருவிழாவை முன்னிட்டு வருகிற 5-ம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணையிடப்பட்டு உள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. வருகிற  5-ம் தேதி தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளுக்காக தேவையான பணியாளரை கொண்டு இயங்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


குடியரசு தலைவர் வேட்பாளராக
அப்துல் கலாமை நிறுத்த வேண்டும்
கீ.வீரமணி வேண்டுகோள்
03-06-2012
திராவிட கழக தலைவர் கீ.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஒரு தரப்பினர் அறிவித்துவிட்ட நிலையில் ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையை தொடர்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை அறிவிக்க வேண்டும். அப்துல் கலாமை அறிவித்தால் பல எதிர்கட்சி வட்டாரங்களும் கூடி வரவேற்று ஆதரவு தருவதற்கு முன்வரக்கூடும். அவருடைய கனிந்த அனுபவ அடிப்படையில் உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்க்க சர்வதேச புகழ்பெற்றவர். ஒரு சிறுபான்மை சமூகத்தவர் ஆனவர். அனைத்து தரப்புடனும் அன்போடு, பண்போடு பழகும் தன்மை கொண்டவர் அப்துல் கலாம் ஆவார். இவ்வாறு கீ.வீரமணி கூறியுள்ளார்.


குமரி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில்
திட்ட பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்
பேரூராட்சிகளின் இயக்குனர் சந்திரசேகரன் நேரில் ஆய்வு
02-06-2012
குமரி மாவட்டம் விலவூர், வில்லுக்குறி, திங்கள்நகர், மண்டைக்காடு மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மற்றும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ம.சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விலவூர் பேரூராட்சியில் ரூ.26.50 லட்சத்திலும், வில்லுக்குறி பேரூராட்சியில் ரூ. 24 லட்சத்திலும், மண்டைக்காடு பேரூராட்சியில் ரூ. 26 லட்சத்திலும் நடைபெறும் சாலைப்பணிகளை அவர் பார்வையிட்டார்.  

திங்கள்நகர் பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்புக்கான பற்றாக்குறையை ஈடுசெய்யும் நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் நவீன இறைச்சி கூடம் கட்டுமானப் பணியையும், கன்னியாகுமரி பேரூராட்சியில் மெகா சுற்றுலா திட்டத்தின் கீழ் ரூ.14.13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளையும் பேரூராட்சிகளின் இயக்குனர் ம.சந்திரசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப்பணிகளையும் தரமுடனும், குறித்த காலத்துக்குள்ளும் முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வு மேற்கொண்ட அனைத்து பேரூராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இயக்குனர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தொய்வின்றி மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்த இயக்குனர் குறித்த காலத்தில் அந்த பணிகளை முடிக்க அறிவுரை வழங்கினார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் செயல்அலுவலர்களின் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பழனிச்சாமி, உதவி செயற்பொறியாளர்கள் இராதாகிருஷ்ணன், ஜோதி முருகன் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


வபாத்தானார்கள்
02-06-2012
மணவாளக்குறிச்சி, பள்ளிவாசல் பின்புறம் உள்ள காணவிளையை சேர்ந்தவர் பாத்திமா பீவி(70). இவருடைய கணவர் ஷேக் உதுமான். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். பாத்திமா பீவி உடல்நல குறைவால் இருந்து வந்தார். இந்நிலையில் 31-05-2012 அன்று மாலை 7 மணி அளவில் வபாத்தானார்கள்.  அன்னாருடைய நல்லடக்கம் 01-06-2012  வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி மையவாடியில் வைத்து நடைபெற்றது. இவருக்கு பஷீர் அகமது, சாதிக், உமர் பாரூக், அப்துல் காதர் ஆகிய மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.


விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
மாணவ, மாணவிகள் உற்சாகம்
02-06-2012
கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி இறுதித்தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மாணவ, மாணவிகள் உறவினர் வீடுகளுக்கு சென்று பொழுதுபோக்கியும் சிறப்பு வகுப்புகளுக்கு சென்று பயனுள்ள வகையிலும் கழித்தனர். இந்நிலையில் கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் ஜூன் ஒன்றாம் தேதி மீண்டும் திறந்தன. குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும், சில தனியார் பள்ளிகளும் திறந்தன. பல தனியார் பள்ளிகள் திங்கள்கிழமை அன்று திறக்கின்றன.

பள்ளிக்கூடங்கள் திறந்ததை ஒட்டி மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். மழலையர் சிலர் தாயைப்பிரிந்து புதிதாக பள்ளிக்கு செல்ல அடம் பிடித்து அழுதனர். ஏற்கனவே எல்.கே.ஜி.., யு.கே.ஜி. சென்ற மழலைகள் சிலரும் முரண்டு பிடித்தனர். இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர் நைசாக பேசி வகுப்புக்குள் கொண்டு விட்டனர். 

சில குழந்தைகளை பயமுறுத்தி பணிய வைக்க வேண்டியிருந்தது. புதிய வகுப்புகள் செல்ல வேண்டும் என்பதால் புதிய புத்தகப்பை, புதிய நோட்டு-புத்தகங்கள், புதிய எழுதுபொருட்கள், புதிய சீருடை என அனைத்தும் புதிதாக கிடைத்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


முப்பருவமுறை அறிமுகத்தால்
புத்தக சுமை குறைந்தது  மாணவர்கள் மகிழ்ச்சி
02-06-2012
மாணவ, மாணவிகள் புத்தகங்களை மூட்டை போல முதுகில் தூக்கி செல்லும் நிலையை மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை காலாண்டுக்கு உரிய பாடங்கள் அனைத்தும் ஒரு புத்தகமாகவும், அறையாண்டிற்கு ஒரு புத்தகமாகவும், மீதமுள்ள ஆண்டு இறுதி பருவத்திற்கு ஒரு புத்தகமாகவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒரே புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும் அடங்கி இருக்கும். ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகம் மட்டும். 3 பருவத்திற்கு மொத்தம் 3 புத்தகங்கள் மட்டும்தான்.

6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் 2 புத்தகங்கள் மட்டும்தான். தமிழ், ஆங்கிலம் சேர்த்து ஒரு புத்தகமாகவும், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்கள் சேர்ந்து ஒரு புத்தகமாகவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதும் தமிழ்நாடு முழுவதும் இந்த புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. புத்தகங்களை பெற்ற மாணவ, மாணவிகள் இனி புத்தக சுமை இல்லையென்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.


ஆசாரிபள்ளம் அருகே
அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
யார் அவர்? போலீஸ் விசாரணை
02-06-2012
ஆசாரிபள்ளம் போலீஸ் சரகம் பெருவிளை அருகே உள்ள பள்ளவிளையை சேர்ந்தவர் ராஜ் (வயது 78). இவருக்கு அந்த பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. 01-06-2012 அன்று காலை அந்த தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்குள்ள புன்னைமரத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார். அந்த உடல் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் காணப்பட்டது. இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக தொங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவர் சட்டையை கழற்றி சுருட்டி வைத்திருந்தார். அதில்  40 ரூபாய் பணம் இருந்தது. சட்டையில் உள்ள டெய்லர் முகவரியில் தெரிசனங்கோப்பு என்று இருந்தது.

எனவே அவர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனடிப்படையில் ஆசாரிப்பள்ளம் போலீசார் பூதப்பாண்டி போலீசாரை தொடர்பு கொண்டு இதுபற்றிய விபரத்தை தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக தொங்கியவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


காயிதேமில்லத் நினைவிடத்தில்
5-ம் தேதி அதிமுக மலர் போர்வை போர்த்தி மரியாதை
02-06-2012
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காயிதேமில்லத் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு 5-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை  11 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதேமில்லத் நினைவிடத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் காயிதேமில்லத் பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.


 நாகர்கோவிலில்
லோடு ஆட்டோவில் பொருட்கள் திருடிய வாலிபர் கைது
01-06-2012
நாகர்கோவில், இருளப்பபுரம் தனபெருமாள் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 31). இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவை கடந்த 28-ம் தேதி இரவில் தனது வீட்டுமுன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அந்த ஆட்டோவில் இருந்த மரத்தால் செய்யப்பட்ட 2 ஸ்பீக்கர்கள், 2 ஹாரன்கள், மேலும் 2 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 3500 இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கண்மணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பவர்தான் ஆட்டோவில் பொருட்கள் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்து திருட்டுப்போன பொருட்களை பறிமுதல் செய்தனர்.


உதவும் கரங்கள் சார்பில்
இலவச நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா
01-06-2012
திங்கள்சந்தை உதவும் கரங்கள் சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா ராதாகிருஷ்ணன் கோவில் வளாகத்தில் நடந்தது. அபர்ணா அய்யப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய பா.ஜனதா பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். வெள்ளிமலை சுவாமி கருணானந்தஜி மகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச நோட்டு புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் முருகன், நாராயணன், ராதா, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தக்கலை பகுதியில்
குழந்தைகளின் தாய்-பெண் என்ஜினியர் மாயம்
போலீசார் தேடுகின்றனர்
01-06-2012
அஜிதா
தக்கலையை அடுத்த மேட்டுக்கடையை சேர்ந்தவர் அய்யாப்பிள்ளை. இவரது மகள் ஜெயின் நிர்மல் (வயது 23). என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர் கடந்த மாதம்  22-ம் தேதி மேற்படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஜெயின் நிர்மலின் தாயார் எமி தக்கலை போலீசில் புகார் செய்தார்.

ஜெயின் நிர்மல்
தக்கலை புங்கரையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஜிதா (வயது 28). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் 25-ம் தேதி தனது குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு அஜிதா மட்டும் அஞ்சுகிராமத்திற்கு சென்று குழந்தைகளுக்கான அரசு நிவாரணம் பெற்று வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.

இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடினார்கள். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் தக்கலை போலீசில் புகார் செய்தனர். இரு புகார்களின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமசிவம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் டென்னிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.


கன்னியாகுமரி அருகே
உரக்கிடங்கில் திடீர் தீவிபத்து
புகையால் சுவாசிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
01-06-2012
கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரம் நான்குவழி சாலை அருகே கன்னியாகுமரி பேரூராட்சி மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான உரக்கிடங்கு அமைந்துள்ளது. இந்த உரக்கிடங்கில் பல டன் கணக்கில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் 31-05-2012 அன்று காலையில் திடீரென்று உரக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. இதனால் நான்குவழி சாலை பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுவிடக்கூட முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.



புகை மூட்ட சாலை
தீ பற்றிய உரக்கிடங்கு
உடனே, இதுபற்றி பேரூராட்சி ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மிக்கேல் லாசர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இருப்பினும் தீயை அணைக்க முடியாததால் நாகர்கோவிலில் இருந்து கூடுதலாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதன்பின்னரே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


அரசுத்துறைகள் மூலமாக
புகையிலை பொருட்களுக்கு விளம்பரமா?
டாக்டர் ராமதாஸ் கண்டனம்
01-06-2012
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பெருமளவில் பயன்படுத்தப்படும் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா, மூக்குபொடி, மெல்லும் புகையிலை ஆகியவை மனிதர்களின் உயிர்களை பிறக்கும் பொருட்கள் ஆகும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உரிய வயதை அடையும் முன்பே உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.

புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, கைனி உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்யவேண்டும். மக்களின் நலன் காப்பதே அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் மக்களின் நலன் கருதி புகையிலை பயன்பாட்டை தடுக்க வேண்டிய காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற அரசுத்துறைகள் மூலமாகவே புகையிலை பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுத்துரையினருடன் புகையிலை நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு விளம்பரம் செய்வதை தமிழக அரசு தடை செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்


மார்த்தாண்டம் அருகே
மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
01-06-2012
மார்த்தாண்டம் அருகே உள்ள முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் பால்ராஜ் (வயது 29) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஷீபா. இவர்களுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ஷீபா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் ஆடுவளர்த்து வருகிறார். ஆட்டுக்கு உணவுக்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பலா மரத்தில் இலை வெட்டுவதற்காக ஏறினார். அப்போது அவர் வெட்டிய கிளை அருகே சென்ற மின்கம்பி மீது உரசி, பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதனால் பால்ராஜ் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 4-வது மாதத்திலேயே தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இரணியலில்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
01-06-2012
இரணியல் போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது வக்கீல் சதீந்திரகுமாரை அங்கு பணியில் இருந்த பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தையில் பேசியதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன்பேரில் இரணியல் போலீஸ் நிலைய பயிற்சி சப் இன்ஸ்பெக்டரின் செயலை கண்டித்து இரணியல் வக்கீல் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரிடம் புகார் செய்தனர்.

இதில் துணைத்தலைவர் சுதானந்தா, இணைச்செயலாளர் ஜோதிராம், பொருளாளர் ஜெயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ராஜன்கார்வி, ஜெயத்துரை, தனிஸ்லாஸ், பத்மகுமார், நூலகர் செல்வகுமார் உள்ளிட்ட வக்கீல்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்
ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
வக்கீல் ராபர்ட் புரூஸ் தகவல்
01-06-2012
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராபர்ட் புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் பள்ளிகள் ஜுன் மாதம் திறப்பதை ஒட்டி வறுமையில் வாடும் ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட உள்ளது.

2-ம் தேதி குளச்சலிலும் 3-ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலிலுள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலும், 4-ம் தேதி மாலை மணிக்கு தோவாளை வட்டாரம் அழகியபாண்டிபுரத்திலும் வைத்து இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெற்றுத்தரப்படும். வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை, மாவட்ட காங்கிரஸ் தொடர்பு கொண்டு கல்விக்கடன் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.


கருங்கல் அருகே
கள்ளக்காதல் ஜோடி சொகுசு காரில் உல்லாசம்
போலீசார் எச்சரித்து அனுப்பினர்
01-06-2012
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் இருந்து ஆப்பிக்கோடு செல்லும் சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு சொகுசு கார் நிற்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். சப்போது 2 வாலிபர்கள் அந்த காரின் டயரை மாற்றுவது போல நின்றனர். போலீசார் அந்த காரின் உள்ளே பார்த்த போது அதில் ஒரு வாலிபரும், ஒரு இளம் பெண்ணும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் குளச்சல் அருகே உள்ள குரும்பனையை சேர்ந்தவர் என்பதும், அவருடைய கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அந்த வாலிபருக்கும் திருமணமாகி உள்ளதும் தெரியவந்தது. இருவரும் படிக்கும் போதே காதலித்து வந்ததாகவும், தற்போது அவர்கள் தனிமையில் சந்தித்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தக்கலை அருகே
கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
01-06-2012
தக்கலை போலீஸ் சக்கரம் மேக்காமண்டபம் பண்டாரகுளத்தை சேர்ந்தவர் கமலபாய் (வயது 67).  இவர் 30-05-2012 அன்று இரவு 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் ஸ்டீபன் வீட்டுக்கு தூங்கசென்றார். காலையில் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. மேசை டிராயரில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் 9 ஆயிரத்து  200 ஆகியவை திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உறவினர்களுக்கும், தக்கலை போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமசிவம், சப் இன்ஸ்பெக்டர் டென்னிஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.


பஸ் மீது கல்வீசி உடைத்தவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
போலீஸ் டி.ஐ.ஜி. தகவல்
01-06-2012
குமரி மாவட்டத்தில் பஸ் மீது கல்வீசி தாக்கி உஅடித்த்வர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு இல்லாது என போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜு கூறினார்.  குமரி மாவட்டத்தில் பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் 31-05-2012 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. ஆனாலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்ததால், கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5 கம்பெனி அனுப்பப்பட்டது.

நெல்லை  சகர போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜு குமரி மாவட்டத்துக்கு வந்து, நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரை அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். குமரி (பொறுப்பு) போலீஸ் சூப்பிரண்டு விஜேந்திர பிதரி உடன் சென்றார்.

குமரி மாவட்டத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது பற்றி போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, குமரி மாவட்டத்தில் 11 தமிழக பஸ்கள் மீதும், 2 கேரளா அரசு பஸ்கள் மீதும் கல்வீச்சு நடந்தது. இதில் 13 பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டவர்களை பிடிக்க  6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு டி.ஐ.ஜி.வரதராஜு கூறினார்.


கல்குளம் தாலுகா ஜமாபந்தியில்
169 பேருக்கு நத்திட்ட உதவிகள்
துணை கலெக்டர் வழங்கினார்
01-06-2012
கல்குளம் தாலுகா ஜமாபந்தி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் பொதுமக்களிடம் இருந்து 1293 மனுக்கள் பெறப்பட்டன.  463 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  632 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இதில் 169 மனுக்கள் ஏற்கப்பட்டு 154 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 15 பேருக்கு பட்டாமாறுதலும் வழங்கப்பட்டது. துணை கலெக்டர் உத்தமன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் பார்த்தீபன், தாசில்தார் உஷா, கலெக்டர் அலுவலக மேலாளர் நாராயணதாஸ், மண்டல துணை தாசில்தார்கள் முருகன், ஜாய்சரோஜா, வட்ட வழங்கல் அலுவலர் மணிதாஸ், தலைமையிடத்து துணை தாசில்தார் ஷீலா, கூடுதல் துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


நாகர்கோவிலில், சுவரொட்டி ஒட்டியதாக
பா.ஜனதா கட்சியினர்
18 பேர் கைது
01-06-2012
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் பா.ஜனதா கட்சியினர் சார்பில் மறியல் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில பா.ஜனதா தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாகர்கோவில் நகர பா.ஜனதா கட்சி தலைவர் ராஜன் தலைமையில் கூட்டமாக சென்று செட்டிக்குளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார்கள்.

அவருடன் மாவட்ட செயலாளர் தேவ், நகர பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் பெருமாள் பிள்ளை, அய்யப்பன், செல்வம், நாகராஜன் உள்பட பலர் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி விரைந்து சென்று ராஜன் உள்பட 18 பேர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது சுவரொட்டி ஒட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில்
பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு
உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
01-06-2012
அரசு மருத்துவ கல்லூரி, ஆசாரிபள்ளம்
குலசேகரம் அருகே உள்ள பொன்மனையை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி சுசித்திரா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சசிந்திரா 2-வதாக கர்ப்பம் தரித்தார். அவரை பிரசவத்துக்காக நாகர்கோவில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகயில் சேர்த்தனர். அங்கு சசிந்திராவுக்கு 2-வதும் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 31-05-2012 அன்று காலை சசிந்திராவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. உடனே சசிந்திராவின் தாயார் டாக்டரிடம் தெரிவித்தார். டாக்டர்கள் விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சசிந்திரா பரிதாபமாக இறந்தார். மகளின் உடலை பார்த்து சசிந்திராவின் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், சசிந்திராவின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆஸ்பத்திரில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


குளச்சலில்
மின்கம்பியில் தென்னைமரம் விழுந்தது
01-06-2012
குளச்சல் உடையார்விளை பகுதியில் ஒரு வீட்டில் உள்ள தென்னை மரம மின்கம்பியில் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் தீயணைப்பு வீரர்களும், மின் ஊழியர்களும் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


மார்த்தாண்டத்தில்
லாரி மோதி தொழிலாளி சாவு
31-05-2012
மார்த்தாண்டம் வடக்குதெரு கோவில் விளையை சேர்ந்தவர் சுவாமி தாஸ் (வயது 48). இவருடைய மனைவி கிறிஸ்டினாள். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சுவாமிதாஸ் 29-05-2012 அன்று இரவு மார்த்தாண்டம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சுவாமிதாஸ் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சுவாமிதாசை அருகில் உள்ளவர்கள் மீட்டு முழுத்துரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுவாமிதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


களியக்காவிளை அருகே
மலையில் இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்
போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை
31-05-2012
களியக்காவிளை அருகே உள்ள மலையடி பகுதியில் சுமார் 500 அடி உயர மலை உள்ளது. இங்கு மிகவும் பழமையான சிவன் கோவில் மற்றும் தேவி கோவில் உள்ளது. இந்த பகுதியில் காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஒயர்லெஸ் கருவி மற்றும் வாக்கி டாக்கி உபகரணங்களுக்கு தேவையான “ரிப்பீட்டர்” கட்டுப்பாட்டு அரை உள்ளது. இங்கு ஷிப்ட் முறையில் போலீசார் பணியில் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் ஆயுதப்படை போலீசார் ஒருவர் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் மலை உச்சிக்கு ஏறி சென்றார். இதை அப்பகுதியில் நின்ற சிறுவர்கள் பார்த்தனர். அந்த பெண் மலையில் உள்ள கோவிலில் திருட வந்திருப்பாளோ? என்ற சந்தேகத்தில் சிறுவர்கள் ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் கூறினர். உடனே பொதுமக்கள் திரண்டு வந்து அந்த மலை உச்சிக்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த பெண்ணும், அந்த “ரிப்பீட்டர்” ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இருவரையும் கீழே அழைத்து வந்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அந்த பெண் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதும், அவர் அங்கன்வாடி பணியாளர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணையும், போலீஸ்காரரையும் பளுகல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் விசாரணை நடத்திவிட்டு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த போலீஸ்காரர் மற்றும் அந்த பெண்ணிடம் உயர்போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு
மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
பள்ளிகளில் உடனடியாக வேலைவாய்ப்பு பதிவு
31-05-2012
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டன. குமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 10 மாணவர்களும், 12 ஆயிரத்து 812 மானவிக்களுமாக மொத்தம் 22 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் ஆயிரத்து 305 மாணவர்களும், 12 ஆயிரத்து 111 மானவிக்களுமாக மொத்தம் 20 ஆயிரத்து 416 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் 30-05-2012 அன்று முதல் விநியோகிக்கப்பட்டன. அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணியை நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மதிப்பெண் சான்றிதழின் பின்னால், அந்த மாணவ, மாணவிக்கு லேப்-டாப் வழங்கப்பட்டதா? இல்லையா? என்ற விபரமும் இடம் பெற்றிருந்தது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பிளஸ-2 கல்வித்தகுதியை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நிகழ்ச்சியும் அந்தந்த பள்ளிகளில் வைத்து நடைபெற்றது. உடனுக்குடன் பதிவு செய்து மாணவ, மாணவிகளிடம் சான்றிதழை வழங்கினார்கள். சான்றிதழ் வாங்க பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைகமாக இருந்தது.


குமரி மாவட்டத்தில் அமையும்
அரசு கலைக்கல்லூரிக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும்
ஐக்கிய ஜனதாதளம் கோரிக்கை
31-05-2012
குமரி மாவட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் ஜி.வர்கீஸ் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் எஸ்,ஆர்.ஜெபமணி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.என்.அரவிந்த் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் ஜி.சரோஜோனி, தேசியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சிரில்கிறிஸ்துராஜ், சி.தெய்வராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.நித்யானந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.கிறிஸ்டி, எஸ்.கணபதி ஆர்.முருகன், எஸ்.மகாதேவன்பிள்ளை, சி.அப்பாத்துரை, பொதுசெயலாளர் சி.பி. அய்யப்பன்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் புதிதாக அமையவிருக்கும் அரசு கலைக்கல்லூரிக்கு காமராஜர் பெயரை வைத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, சுசீந்திரம் பழையாற்றுபாலம் மற்றும் செங்கட்டி பாலம் ஆகியவற்றுக்கு பதிலாக புதிய மாற்றுபாலம் அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர தலைவர் ஏ.ஜோசப் தங்கராஜ் நன்றி கூறினார்.


சூதாட்ட கும்பலிடம் ரூ.4 லட்சம் பணம் பறிப்பு
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் – ஏட்டுகள் “சஸ்பெண்டு”
31-05-2012
கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி லாட்ஜில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிகொண்டு இருந்தது. அப்போது திடீரென போலீசார் அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் சூதாட்ட கும்பல் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சூதாட்ட கும்பல் வைத்திருந்த ரூ.லட்சத்தை போலீசார் பறித்து சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து மறுநாள் சூதாட்ட கும்பலினர், தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் விபரம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ரூ.4 லட்சம் பண விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சூதாட்ட குமபலிடம் பணம் பறிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் நாகர்கோவிலில் விசாரணை நடந்தது. விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் குமரி மாவட்ட கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம், ஏட்டு ராஜபாண்டியன், மற்றொரு ஏட்டு ரமேஷ் ஆகிய பேர் “சஸ்பெண்டு” செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்டு உத்தரவை அந்தந்த துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இது போலீஸ் வட்டாரத்தை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குளச்சல் அருகே
காதலன் வீட்டில் சென்னை பட்டதாரி பெண்
தற்கொலை வழக்கில் காதலன் கைது
31-05-2012
லாவண்யா
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஆளுவிளையை சேர்ந்தவர் செந்தில் வினு (வயது 27). பி.இ.பட்டதாரி. இவர் கடந்த ஒரு வருடமாக சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். இந்த கம்பெனியின் அருகில் உள்ள மற்றொரு  கம்பெனியில் திருவள்ளூர், செவ்வாய்பேட்டை ரோடு, கீழம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் லாவண்யா (வயது 24) வேலை செய்தார். இவர் பி.பி.ஏ. பட்டதாரி. கடந்த 7 மாதங்களுக்கு முன் செந்தில் வினுவுக்கும், லாவண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கம்பெனியும் அருகருகே இருந்ததால் 2 பேரும் அடிக்கடி சந்தித்ததால் இந்த பழக்கம் காதலாக மாறியது.

வினு
காதல் ஜோடி அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். அப்போது லாவண்யா தன்னை திருமணம் செய்யுமாறு செந்தில் வினுவிடம் கூறியுள்ளார். செந்தில் வினு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து கடந்த  மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். அதன்பிறகு லாவண்யாவிடம் பேசவில்லை. மேலும் தன்னுடைய செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் லாவண்யா 29-05-2012 அன்று காதலனை தேடி சென்னையில் இருந்து காதலனின் சொந்த ஊருக்கு வந்தார். காதலன் செந்தில் வினுவை கண்டுபிடித்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார். செந்தில் வினு திருமணம் செய்ய மறுத்தார். அதோடு செத்துதொலை என்றும் கூறியுள்ளார். அதுவும் லாவண்யாவுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

மேலும், லாவண்யா இது குறித்து செல்போனில் தனது தந்தை, தாய், சகோதரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு போன் இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் லாவண்யா தனது கைப்பையில் வாங்கி மறைத்து வைத்து இருந்த விஷத்தை எடுத்துக்குடித்து காதலன் கண்முன்னே தற்கொலை செய்து கொண்டார். லாவண்யா போன் பேசி கொண்டிருந்தபோதே திடீர் என்று இணைப்பை துண்டித்துவிட்டதால் அவரது குடும்பத்தினர் கடுமையான பதற்றத்துடன் இருந்தனர். அதற்குள் போலீஸ் மூலம் தங்கள் மகள் தற்கொலை செய்த விபரத்தை அறிந்து கதறி துடித்தனர்.

பின்னர் லாவண்யாவின் தந்தை சுப்பிரமணியன் குளச்சல் வந்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குபதிவு செய்து காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் செந்தில் வினுவை கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவின் தந்தை சுப்பிரமணி கூலி வேலை செய்து வருகிறார். தாய் பெயர் மோகனா. சரண்யா, சுகன்யா என்ற தங்கைகளும் உள்ளனர்.


நாகர்கோவிலில்
தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெற வலியுறுத்தல்
31-05-2012
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தி,மு.க. தலைமைக்கழகம் அறிவிப்பின்படி 30-05-2012 அன்று மாநிலம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஹெலன்டேவிட்சன் எம்.பி., புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் பொன்.சின்னதுரை, அவைத்தலைவர் ஜோசப் ராஜ், முன்னாள் எம்.பி. சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, ஜி.எம்.ஷா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அஜிதா, நகர செயலாளர் மகேஷ் உள்பட முக்கிய தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் பெட்ரோல் விலையை திரும்ப பெறகோரி கோஷமிட்டனர். பெட்ரோல் விலை உயர்வால் மோட்டார் வாகனங்களை இயக்க முடியாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு மோட்டார் சைக்கிளை மாட்டுவண்டியில் ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டு வந்தனர்.


மணக்குடி காயலில் பெண் பிணம்
கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
30-05-2012
புத்தளம் அருகே அமைந்துள்ளது மணக்குடி கடற்கரை கிராமம். அங்கு கடலோடு கலக்கும் பழையாறு காயல் உள்ளது. இந்த காயலில் காலையில் ஒரு பிணம் மிதந்து கொண்டு இருப்பதாக அந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.  இதுபற்றி மணக்குடி ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜன், பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பெண் பிணம் நடுகடலில் மிதந்து கொண்டு இருந்தது. அந்த பிணத்தை மீட்பதற்காக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தை நாடினர். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பிணத்தை காயலில் இருந்து கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கும் என்று தெரியவந்தது. அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கரும்பச்சை கலரில் சேலை அணிந்து இருந்தார். அவரை யாராவது காயலில் பிடித்து தள்ளிவிட்டார்களா? அல்லது அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் அந்த பெண்ணின் சாவுக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.


தங்கநாற்கர சாலை திட்டத்தை
குமரி மாவட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை
30-05-2012
கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் எம்.தாமஸ் தலைமையில் நாகர்கோவில் அசிசி வளாக அரங்கில் நடந்தது. துணைத்தலைவர் ஆர்.செலின்மேரி வரவேற்று பேசினார். ஏ.பி.சுந்தரராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் எம்.அல்போன்ஸ் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பாலத்தையும், செங்கட்டி பாலத்தையும் அகற்றிவிட்டு அகலமான பாலத்தை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்வது என்றும், குமரி மாவட்டத்தில் தங்கநாற்கர சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மத்திய அரசை கேட்டுகொள்வது என்றும், ஆட்டோகளுக்கு நியாயமான புதுக்கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க அரசை கேட்டுகொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் துணைத்தலைவர் ஆர்.ரவீந்திரன் நாயர் நன்றி கூறினார்.


குளச்சல் அருகே
விபத்தில் காயம் அடைந்த வங்கி துணைமேலாளர் சாவு
30-05-2012
திருவனந்தபுரம் தம்பானூராய் சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 45). இவர் திங்கள்சந்தையில் உள்ள ஒரு தனியார் வகையில் துனைமேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் குளச்சல் அருகே உள்ள லெட்சுமிபுரம் வந்தார். பின்னர் ஊர் திரும்புவதற்காக லெட்சுமிபுரம் சந்திப்புக்கு வந்தபோது எதிரேவந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹரீஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த கார் ரோட்டில் நடந்து சென்ற மண்டைக்காடு புதூரை சேர்ந்த மரிய ரோச் (வயது 65) என்ற பெண் மீதும் மோதியது. இவர் தலைசுமையாக சென்று மீன்வியாபாரம் செய்து வருபவர். இவர் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயம் அடைந்த ஹரீஷ் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், காரை ஓட்டிவந்த ஒற்றபனைவிளை ஜெர்லின்ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


பெட்ரோல் மீது
மாநில அரசு விதிக்கும் வரியை குறைக்க வேண்டும்
விஜயதாரணி எம்.எல்.ஏ. பேட்டி
30-05-2012
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதராணி நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு சர்வதேச சந்தையில் கொள்முதல் செய்யும் விலைக்கே பெட்ரோலை மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அந்த பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வரிவிதிப்பதால் அதன் விலை உயர்கிறது. அதிலும் தமிழ் நாட்டில் 27 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.60-க்கு கொடுக்கும் போது, தமிழக அரசு 27 சதவீதம் வரியாக ரூ. 18 விதிப்பதால் பெட்ரோல் விலை ரூ.78 ஆகிறது. கேரளா அரசு கூடுதலாக கிடைக்கும் வருவாய் ரூ. 4.35 ஐ குறைப்பதாக கூறியுள்ளனர்.

அதேபோல் கோவாவும் குறைக்க முன்வந்து உள்ளது. தமிழக அரசு நினைத்தால் அவர்கள் விதிக்கும் வரியை மக்களுக்காக விட்டு கொடுத்தால் பெட்ரோல் விலையில் ரூ.18 குறையும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 60-க்கு கிடைக்கும் அல்லது தமிழக அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வரியில் குறைந்தபட்சம் ரூ.8ஐ யாவது குறைக்க வேண்டும். இவ்வாறு விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறினார்.


குமரி மாவட்டத்தை சேர்ந்த
109 வயது முதியவர் சென்னைக்கு சைக்கிளில் செல்ல விருப்பம்
30-05-2012
தற்போதைய உலகில் 45 வயது தொடங்கி விட்டாலே பல்வேறு நோய்களை கூறி வேதனைபடுபவர்களை நாம் காண்கிறோம். இந்த நிலையில் 109 வயதான முதியவர் சென்னைக்கு சைக்கிளில் செல்ல விரும்புகிறார். அவரை பற்றிய விவரம் வருமாறு, குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் கணபதி. இவர் 1903-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி பிறந்தார். தனது 15-ம் வயது முதல் திருநேல்வேலியில் உள்ள மாமா வீட்டில் வாழ்ந்தார்.

பின்னர் மாமா மகளை திருமணம் முடித்தார். திருமணத்துக்கு பின்பு ஆங்கிலேயரின் ராணுவத்தில் சேர்ந்தார்.  2-ம் உலக போரின்போது இத்தாலியில் 5 வருடம் பணிபுரிந்துள்ளார். போர் முடிந்ததும் இந்தியாவுக்கு திரும்பி வந்து சென்னையில் தொழில் செய்தார். இவருடைய மனைவி பெயர் கமலம். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்தார். இதன்பின்னர் இவரை கவனிப்பார் இன்றி தவித்தார்.

இதனால் வேதனை அடைந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் குமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறைக்கு வந்தார். இங்குள்ள சித்தா கல்லூரியில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்ந்தார். அதன்பின்னர் அங்கேயே தங்கி இருக்கிறார். அவருக்கு தற்போது 109 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் சமையல் செய்தல், முகச்சவரம் செய்தல் என தன்னுடைய பணிகளை தானே செய்து வாலிபர் போல் இப்பகுதியில் சைக்கிளில் உலாவருகிறார். இந்த வயதிலும் அவர் இளைஞர் போல் செயல்படுவது இப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

தனது உடல்நிலை ஓரளவு குணமானால் சென்னைக்கு சைக்கிளில் செல்ல விரும்புகிறார். அந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடன் உள்ளார். உலகப்போர் ஆயுட்கால நிதியாக வரும்  1000 ரூபாயை வைத்து முதியவர் கணபதி வாழ்ந்து வருகிறார். இந்த வருமானம் போதாமல் சிரமப்படுகிறார். தன்னை குடும்பத்தினர் யாரும் கவனிப்பதில்லை என்றும் வேதனையுடன் கூறினார். எனவே எனக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார். 109 வயதில் அரசின் உதவியை எதிர்பார்த்து முதியவர் கணபதி காத்திருக்கிறார்.


நாகர்கோவிலில்
குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டியதால் பரபரப்பு
மடக்கிப்பிடித்த போலீசாரை மிரட்டிய பெண்
30-05-2012
நாகர்கோவில் பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் 29-05-2012 அன்று மாலை ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்தனர். காரில் இருந்த பெண் பயங்கரமாக சத்தம் போட்டபடியே காரில் வந்தார். இதனால் அந்த காரில் வந்த பேரும் அந்த பெண்ணை சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த கார் அங்குமிங்கும் தாறுமாறாக ஓடியது.

இதை பார்த்ததும் அங்கு பணியில் நின்று கொண்டிருந்த நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையிலான போலீசார் காரில் பெண்ணை யாரும் கடத்தி செல்கிறார்களா? என்ற சந்தேகத்தில் அந்த காரை நிறுத்தினார். போலீசாரை பார்த்ததும் கார் நின்றது. ஆனால் அந்த காரில் இருந்த ஒரு ஆண் மட்டும் போலீசாரை பார்த்ததும் ஓடிவிட்டார். காரை ஒட்டி வந்த மற்றொருவரும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிபிடித்தனர்.

மேலும் காரில் சத்தம் போட்டபடியே வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் என்பதும், அவரை காரில் வந்த இரண்டு பேரும் சேர்ந்து அழைத்து சென்றதும், பெண் உள்ளிட்ட பேரும் மது அருந்திவிட்டு காரில் வந்ததும் தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அந்த பெண் “தனக்கு முதல் அமைச்சரை தெரியும். எனவே தன்மீது நடவடிக்கை எடுத்தால் உங்களை வேறு ஊருக்கு மாற்றிவிடுவேன்” என்று போதையில் போலீசாரை மிரட்டியதாக தெரிகிறது.

இருப்பினும் போலீசார் பிடிபட்ட அந்த பெண்ணையும், மற்றொரு ஆணையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் குடிபோதையில் இருந்த பெண்ணை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட ஆணை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றொரு ஆண் காங்கிரஸ் பிரமுகர் என்று கூறப்படுகிறது.

அந்த பெண்ணை காரில் சென்ற ஆண்கள் இருவரும் உல்லாசமாக இருக்க பேரம் பேசி அழைத்து சென்றபோது குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதைதொடர்ந்து அந்த பெண் காரில் இருந்து குதிக்க முயன்றதாகவும், அவரை கட்டுபடுத்த முயன்றபோது கார் தாறுமாறாக ஓடியதாகவும் தெரிகிறது.


மார்த்தாண்டத்தில் சி.எஸ்.ஐ. நர்சிங் கல்லூரி தொடங்க 
இந்திய நர்சிங் கவுன்சில் அங்கீகாரம்
குமரி பேராய மெடிக்கல் மிஷன் பொருளாளர் ராபர்ட் புரூஸ் தகவல்
29-05-2012
மார்த்தாண்டத்தில் சி.எஸ்.ஐ. நர்சிங் கல்லூரி தொடங்க இந்திய நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் குமரி பேராய மெடிக்கல் மிஷன் பொருளாளர் ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மார்த்தாண்டத்தில் சி.எஸ்.ஐ. நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்று காரிய நிர்வாகக்குழு மற்றும் மருத்துவக்குழு முடிவு செய்து, அதன் அடிப்படையில் பிரதம பேராயர் தேவகடாட்சம் தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் கோரி மனு செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு கல்லூரியை ஆய்வு செய்ய குழு ஒன்றை அனுப்பி ஆய்வு முடித்து நர்சிங் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

பின்னர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் இணைப்பதற்கான சம்மத சான்றிதழ் கோரி மனு செய்யப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகம் ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வழங்கியது. அதன்பின்னர் இந்திய நிர்சிங் கவுன்சில் கடந்த ஆண்டு ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்து ஆய்வு முடிவில் பல்வேறு காரணங்களுக்காக அங்கீகாரம் வழங்க மறுத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து பேராயர் தேவகடாட்சத்தால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, மருத்துவ மிஷன் பொருளாளர் வக்கீல் ராபர்ட் புரூசால் வாதிடப்பட்டது.

அதைதொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படியும், புதிய ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய நர்சிங் கவுன்சில், மார்த்தாண்டம் நர்சிங் கல்லூரியை 40 மாணவர்களுடன் தொடங்க 24-05-2012 அன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை இந்திய நர்சிங் கவுன்சில் வழங்கியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக இணைப்பை பெற்று இந்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை நடத்தலாம். என ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.


குளச்சல் கடலில்
அரியவகை புலிஇறால் மீன் சிக்கியது
ரூ.5 ஆயிரத்துக்கு ஏலம் போனது
29-05-2012
குளச்சல் பகுதியில் ஏராளமான படகுகள் மீன்பிடித்து வருகின்றன. 28-05-2012 அன்று அதிகாலை வந்த ஒருவரது படகில் ஒரு இறால் மீன் மட்டுமே கிடைத்திருந்தது. அதன் மேல் பகுதியில் பலவர்ணங்களாக காட்சியளித்தது. இந்த இறால் மீனின் தலைப்பகுதியில் 2 நீளமுள்ள கொம்பு போன்ற அமைப்பும் இருந்தது. இந்த அரியவகை புலிஇறால் மீன் உயிருடன் விலைக்கு கொடுக்கப்பட்டது. அது ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதுபோன்று அரியவகை மீன்கள் உயிருடன் கிடைத்தால் நல்ல விலைக்கு போகும் என்ற காரணத்தால், அவற்றை மீன் கம்பெனிகளில் உள்ள தொட்டிகளில் போட்டு வளர்ப்பார்கள். பின்னர் கேரள வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு விற்பனை செய்வார்கள். அவற்றை வாங்கி செல்லும் வியாபாரிகள் 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.


80 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை
அமைச்சர் பச்சைமால் வழங்கினார்
29-05-2012
ஏழை பெண்கள் திருமணத்துக்கு தமிழக  அரசு சார்பில் உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை சார்ந்த மாற்றித்திறனாளிகளிகளில் பலர் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு நிதி உதவி தனியாக ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டது. உதவித்தொகைக்கு 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 பேர் பட்டத்தாரிகள். இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. பட்டத்தாரி அல்லாதவர்கள் 76 பேர். இவர்களில் 46 பேர் தலா ரூ. 20 ஆயிரம் வீதமும், 30 பேர் தலா ரூ.25 ஆயிரம் வீதமுமாக மொத்தம் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் உதவிதொகைக்கான காசோலையை பெற்றனர். மேலும்  4 பேருக்கு தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கலெக்டர் விலாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்டு உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில்
கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
29-05-2012
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோட்டை சேர்ந்தவர் ஞானசீலன் (வயது 24). பி.எஸ்.சி. பட்டத்தாரி. இவருக்கும் மார்த்தாண்டம் கீழபம்மம் கொற்றவிளையை சேர்ந்த சுஜிபிரியா (வயது 20) பி.ஏ. பட்டபடிப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சாதாரணமாக தோன்றிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு மாயமானார்கள். இது குறித்து சுஜிபிரியாவின் தந்தை  மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஞானசீலனும், சுஜிபிரியாவும் மார்த்தாண்டம் போலீசில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜோசப் சிரில் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி காதலர்களை அனுப்பி வைத்தனர்.


மண்டைக்காட்டில்
நேரு நினைவு நாள் விழா
28-05-2012
மண்டைக்காடு புதூர் சந்திப்பில் நேரு நினைவு நாள் விழா நடந்தது. குருந்தன்கோடு வட்டார செயலாளர் மார்சலின் தலைமை தாங்கினார். மண்டைக்காடு பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறைஸ்ட் ஜெனித் முன்னிலை வகித்து நேரு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.டி. சுந்தர், கமிட்டி தலைவர் வினு, வட்டார செயலர் குமார், குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் சேவியர் சுந்தர்ராஜ், மாவட்ட போது செயலாளர் வக்கீல் ஜான் சவுந்தர், மணவாளக்குறிச்சி காங்கிரஸ் பேரூர் துணைத்தலைவர் அலெக்ஸ், செயலாளர் ஜிபின், சகாயவிஜில் குமார், மிக்கேல், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


நெய்யூரில்
ராஜீவ் காந்தி நினைவு தினம்
28-05-2012
குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் நெய்யூரில் நடைபெற்றது. வட்டார தலைவர் சேவியர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். நெய்யூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் முன்னிலைவகித்தார். மாவட்ட பொது செயலாளர் வக்கீல் ஜான் சவுந்தர், மாவட்ட மகளிரணி தலைவி சுசீலா ஸ்டாரி, வட்டார மகளிரணி தலைவி ஷர்மிளா ஏஞ்சல், சுந்தர், கிறைஸ்ட் ஜெனித், பாக்கிய சாந்த குமார், மேரி ஹெலன, அந்திரேஸ் உள்பட பலர் மரியாதை செலுத்தினர். யானை ஒன்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியது.